Wednesday, April 22, 2009

3. முதல் பிரமிப்பு





















எப்போதும் கையிலே தூக்கித் திரியும் அவளது பென்குயினை - Oreo-வை - விருந்துக்கு சென்ற பெரியப்பா வீட்டில் தொலைத்து விட்டு வந்து விட்டாள். ஆனால், அதற்காக அதிகமாகக் கவலைப்படாதது போல் தோன்றியது. ஆனால் இரண்டு நாள் கழித்து, மேலே உள்ள படத்தை வரைந்து என்னிடமும், அவளது அம்மாவிடமும் காண்பித்து, ' I miss my Oreo so much' என்ற போது பாவமாக இருந்தது.

ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து அவளது Oreo கண்டுபிடிக்கப் பட்டு அவளிடமே வந்து சேர்ந்தது.

இரண்டு விஷயங்கள் எனக்குப் பிரமிப்பளித்தன. ஒன்று: எப்படி நினைவில் இருந்து அவளால் அவளது Oreo-வை வரைய முடிந்தது. என்னதான் கையிலேயே இரவும் பகலும் வைத்திருந்தாலும் இந்த வயதில் அதை மனக்கண் முன் கொண்டு வந்து எப்படி வரைய முடிந்தது என்பது.

இரண்டாவது: நானும் அவள் அம்மா இருவருமே Oreo-வின் இற்க்கைகளுக்கு நடுவில் என்ன வரைந்திருக்கிறாள் என்பது புரியாமல் முழித்தோம். Oreo வந்த பிறகு, அதனைப் பார்த்ததும்தான் புரிந்தது. அந்த பொம்மையில் அவள் வரைந்த டிசைனிலேயே அதன் கழுத்துப் பகுதிக்கு மட்டும் மஞ்சள் வண்ணத்தில் தனிப் பகுதி இருந்ததைப் பார்த்தோம். எங்களிருவருக்கும் ஆச்சரியம். நாம் இதுவ்ரை அதை அந்த அளவு உன்னிப்பாகப் பார்த்து நினைவில் கொள்ளாததை அவள் மனக்கண்ணில் கொண்டுவந்து வரைந்த்திருக்கிறாளே என்ற பிரமிப்பு ஏற்பட்ட போதுதான் இந்த வலைப்பூ ஒன்று ஆரம்பித்துவிட வேண்டுமென்ற எண்ணமே தோன்றியது.






Tuesday, April 21, 2009

2. முதல் ஆச்சரியம்

*

நான் முதன் முதலில் இவள் நன்றாகப் படம் வரைவாள் போலும் என்று நினைக்க ஆரம்பித்தது இந்தப் படம் பார்த்த பின் தான். தனது பெரியப்பா வீட்டுக்குத் தனது Orio-உடன் சென்றிருந்தாள். அங்கே அவளது 8-ம் வகுப்பு படிக்கும் தமக்கைக்கு அதை 'அறிமுகப்படுத்த', அந்த 13 வயது தமக்கை அதைப் படமாக வரைந்திருக்கிறாள். அவள் வரைந்து முடித்ததும், அதைப் பார்த்து இவளும் வரைந்து கீழே தன் கையொப்பமும் இட்டிருக்கிறாள்.

வலது பக்கம் இருப்பது தமக்கை வரைந்தது. அதைவிட ஜெஸிக்கா வரைந்த படத்தில் அந்த scarf அழகாக, free-flowing-ஆக வரைந்திருந்தது எனக்கு ஆச்சரியமளித்தது. அதுதான் முதல் ஆச்சரியம்.


*

Sunday, April 19, 2009

1. அறிமுகம்

*

ஜெசிக்கா ஷ்ரேயா - என் பேத்தி. (நான் : தருமி) வயது 5. கையில் ஒரு காகிதம் கிடைத்துவிட்டால் உடனே 'படைப்பில்' ஆழ்ந்து விடுகிறாள். எப்போதும் கையில் ஒரு சின்ன soft toy; பென்குயின் பொம்மை; பெயரும் வைத்திருக்கிறாள் அதற்கு. Oreo. படம் வரைய கையில் ஏதாவது கிடைத்துவிட்டால் அந்தப் பென்குயினும் கூட மறந்து போய் விடுகிறது.

நான் ஒரு காலத்தில் வரைய மிக ஆசைப்பட்டேன்; பெரும் முயற்சிகளும் எடுத்து, தோல்வியே கண்டேன். 'சித்திரமும் கைப் பழக்கம்' என்பதைத் தவறென நிருபித்தது எனது தனிப் பெருமை. ஆனால், பேத்தி வரைய ஆரம்பித்ததும் மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. அதுவும் அவள் பென்சில்களைப் பிடிக்கும் முறையோ, free hand-ஆக கோடுகளை அனாயசமாக இழுக்கும்போதோ ஆச்சரியமாக இருந்தது. பேணி வளர்த்தால் நன்றாக வரைவாள் என்று தோன்றுகிறது.

'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்பதுபோல் அவளின் 'கிறுக்கல்கள்' எனக்கு ஓவியங்களாகப் படலாம்தான். இருந்தாலும், அவள் உள்ளே நான் இருப்பதாக நினைக்கும் திறமையைத் தட்டிக் கொடுத்து மேம்பட வைக்கவே இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கிறேன்.
 
template by suckmylolly.com flower brushes by gvalkyrie.deviantart.com